என் தோழி... என் காதலி... என் மனைவி...

தமிழோவியம் இணைய இதழில் வெளிவந்ததாக வினையூக்கி வலைப்பதிவில் நான் படித்த இடுகை..
(பட்டணப்பிரவேசத்தின் முதல் காப்பி பேஸ்ட் :-))

அலுவலகம் வந்ததில் இருந்து ஒரு வேளையும் ஓடவில்லை. கீர்த்தனா செய்த காரியத்திற்கு அவளுக்கு ஒரு அறை கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் மனைவியாக இருந்தாலும் கைநீட்டக்கூடாது என கொள்கை வைத்திருப்பதால் அதைச்செய்யவில்லை.. நான் கல்லூரிக்காலங்கள் எட்டும் வரை என் அம்மாவை கைநீட்டி அடிக்கும் பழக்கத்தை விடாத என் அப்பாவினால், நான் எடுத்த முடிவு எனக்கென வரும் பெண்ணிடம் எந்த விதத்திலும் உடல் ரீதியான வன்முறைகளைப் பிரயோகிக்கக் கூடது என்பது தான். இந்த விசயத்தில், ஜெனியை கல்லூரி கணிப்பொறி ஆய்வகத்தில் நான்கு பேர் மத்தியில் வைத்து அறைந்ததில் சறுக்கி இருக்கிறேன். அந்த அறைக்காக நான் கொடுத்த விலை அதிகம், நல்ல வாழ்க்கைத் துணையாக வந்து இருக்கக்கூடியவளை, தோழி என்ற நிலையிலும் இழந்ததுதான் இன்று வரையில் நான் வருத்தப்பட்டுக்கொண்டிருக்கும் விசயம்.கீர்த்தனாவை நான் காதலித்த காலங்களிலும் சரி, திருமணம் ஆகி இந்த நான்கு வருடங்களிலும் சரி ஒரு முறையேனும் கடிந்து கூடப் பேசியது இல்லை. நான் இப்படி மனதில் பொரிந்து கொண்டிருக்கக் காரணம், காலையில் கீர்த்தனா அஞ்சலிபாப்பாவை கண்மண் தெரியாமல் அடித்ததுதான். . மூன்று வயதுக்குழந்தை குடிக்க கொடுத்த காம்ப்ளானை எங்க வீட்டின் வெளியே இருக்கும் தென்னைமரத்தின் கீழே பாதியைக் கொட்டிவிட்டு என்னிடம் வந்து "அப்பா, கோக்கநெட் டிரீ இன்னும் ஹைட்டா வளரும்பா" சொன்னது தான் தாமதம், வீட்டின் நிலைப்படியில் நின்றுகொண்டு நகத்தைக் கடித்துகொண்டிருந்தவள் அஞ்சலிப்பாப்பவை இழுத்து "ஏண்டி , கஷ்டப்பட்டு உனக்கு காம்ப்ளான் வச்சுக்கொடுத்தா,கீழேயா கொட்டுற, திமிருடி உனக்கு" என சொல்லிவிட்டு பிஞ்சுக் குழந்தையின் கன்னத்திலும் முதுகிலும் தொடர்ந்து அடித்த பொழுது "அம்மு, ஏம்மா குழந்தையை அடிக்கிறே" நான் விலக்கிய பின்னரும் தொடர்ந்து அடித்துக்கொண்டிருந்தாள்.சில நிமிடங்களுக்கு முன்னர் வரை மழலையாய் இருந்த அஞ்சலிப்பாப்பாவின் முகம் வாடி, மிரண்டு போய் இருந்தது. கீர்த்தனாவின் கோபத்திற்கு உண்மையான காரணம் காம்ப்ளானைக் கீழேகொட்டியது அல்ல, இன்று இரவு ரம்யாவின் வீட்டிற்கு விருந்திற்கு குடும்பத்துடன் போகவேண்டும் எனக்கேட்டததற்காகத்தான் இப்படி நடந்து கொள்கிறாள் என்பது எனக்குப்புரிந்தது.ரம்யா என்னால் ஒருதலையாகக் காதலிக்கப்பட்டவள். ரம்யா என்னை ஏற்றுக்கொள்ள மாட்டாள் என உறுதியாகத் தெரிந்த காலங்களில் தான் கீர்த்தனாவின் அறிமுகம், நேசம், எல்லாம் கிடைத்தது. கீர்த்தனாவிடம் எதையும் மறைத்ததில்லை. ஜெனி முதல் ரம்யா வரை எனது அனைத்து விருப்பங்களும் அவளுக்குத்தெரியும். ஜெனி பற்றி பேசினால் கூட பொறுமையாய் கேட்பவள், ஆனால் ரம்யா பற்றி பேசினால் எப்படியாவது பேச்சை மாற்றிவிடுவாள். என்னதான் பிடிக்காமல் இருந்தாலும் ரம்யாவைப்போய் பார்க்க தான் வரவில்லை அல்லது நானும் போகக்கூடாது என நேரிடையாகச் சொல்லி இருக்கலாம்,ஆனால் அதைவிட்டு பிஞ்சு குழந்தையிடம் அவளது கோபத்தைக் காட்டியது எனக்கு வெறுப்பாக இருந்தது.அலுவலகம் வரும் முன் கீர்த்தனாவிடம் "இன்னக்கி சாயந்திரம் ரம்யா வீட்டுக்கு போகவேனாமுன்னா சொல்லிடு நானும் போகல, உன்னையும் கூட்டிட்டுப்போகல, அவள் மேல இருக்கிற கோபத்தை என் குழந்தை மேல காட்டாதே!!" நிதானமாக சொல்லிவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பி வந்தெ வேலையில் மனது ஓடாமல் குட்டிப்பாப்பாவுடன் பேச, வீட்டிற்கு அலுவலகத் தொலைபேசியில் இருந்து அழைத்தேன்."பாப்பா என்ன பண்ணிட்டு இருக்கா?" எனக்கு கீர்த்தனாவின் மேல் கோபம் இருந்தால் அம்மு என விளிப்பதை தவிர்த்துவிடுவேன். அது அவளுக்கும் புரியும். கோபத்தைக் காட்டுவதில் இதுவும் ஒரு வகை."தூங்கிட்டு இருக்கா""லஞ்ச் சாப்பிட்டாளா? திரும்ப அடிச்சியா?""சாப்பாடு ஊட்டி விட்டுட்டுதான் தூங்க வச்சேன், அடிக்கல கார்த்தி" சிறிய மௌனத்திற்குப்பின் "சாரி கார்த்தி" என சொன்னபோது குரல் உடைந்திருந்தது. அழுதிருப்பாள் போலும். இருந்தாலும் கீர்த்தனாவின் மேல் இருந்த கோபம் குறையவில்லை.அவள் "சாரி." சொல்லி முடிக்கும் முன்னரே தொலைபேசியை வைத்தேன்."கார்த்தி, காப்பி போலாமா?" எனது மேலாளர் மோகனின் குரல் கேட்டது.காப்பிக்குடிக்க எங்களது அலுவலகத்தின் மேற்தளத்திற்கு சென்றபொழுது, அவரிடம் காலையில் நடந்த பிரச்சினையை சொன்னேன்."பளார்னு ஒரு அறை விட்டிருக்கனும் சார், பிசிக்கலா வயலன்ஸ் கூடாதுன்னு விட்டுட்டேன்"மோகன் சிரித்தபடி "கார்த்தி, வயலன்ஸ் எந்த ஃபார்ம்ல இருந்தாலும் தப்புதான், வார்த்தைகளில் இ்ருக்கும் வயலன்ஸ் பிசிக்கல் வயலன்ஸை விட குரூரமானது, நீ ரம்யா வீட்டிற்குப்போறதைப் பத்தி கீர்த்தனா கிட்ட டிஸ்கஸ் பண்ணியா, இல்லை போலாம்னு இன்பார்ம் பண்ணியா?"மோகன் கேட்ட கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை."நாம நிறைய சமயங்களில், கோபப்படுவதில்லை, சாத்வீகமா இருக்கோம்னு நினைச்சுக்கிட்டு, நம்மளை அறியாமல் கூட இருக்கிறவங்களைக் டிப்லோமெடிக்கா பேசுறோம்னு வார்த்தைகளில் காயப்படுத்திடுறோம், இதுக்கு முன்னாடி கீர்த்தனா அஞ்சலியை அடிச்சதே இல்லையா?""வாலுத்தனம் நிறைய செஞ்சா அடிப்பாள்""உன்னோட கோபத்திற்கு காரணம், கீர்த்தனா அஞ்சலியை அடிச்சதை விட, ரம்யா வீட்டுக்கு முழுமனசோடு வர விருப்பம் இல்லைன்னு நீ நினைச்சதுதான்""ம்ம்ம்ம்""வாழ்க்கைல எல்லா விசயமும் ப்ரியாரிட்டி தான் கார்த்தி, உனக்கு ரம்யாவோட நட்பு முக்கியமா இருக்கலாம், ஆனால் அதைவிட கீர்த்தனாவை நீ புரிஞ்சுக்கிறது முக்கியம்..... அதிக முக்கியத்துவம் இல்லாத விசயங்களுக்காகத்தான் நாம அற்புதமான உறவுகளை கஷ்டப்படுத்திடுறோம்."பேசிக்கொண்டே எங்கள் இடத்திற்கு வந்தபின் மோகனிடம் "எனக்கு டு ஹவர்ஸ் பர்மிஷன் வேணும்""ம்ம்ம்ம் எடுத்துக்கோ"மோகனிடன் விடைபெற்றுக்கொண்டு, வீட்டிற்கு வந்த பொழுது கீர்த்தனாவும் அஞ்சலிப்பாப்பாவும் அழகான உடைகளில் தயாராகி இருந்தனர். காலையில் ஒன்றுமே நடக்காதது போல அம்மாவும் பிள்ளையும் விளையாடிக்கொண்டிருந்தனர்."என்னோட ரெண்டு தேவதைகளும் ரெடியா ஆயிட்டிங்களா." சொல்லியபடி குழந்தையைத் தூக்கி கொஞ்சிகொண்டே "அப்பா, போய் ரெண்டு நிமிசத்துல ரெடியாயிட்டு வருவேனாம்..அப்புறம் கிளம்புவோமாம்"நானும் வேறு உடைமாற்றிக்கொண்டு நான் காரின் முன்பகுதியில் அமர்ந்து, காரின் பின் இருக்கையைப் பார்க்கும் கண்ணாடியில் என் தேவதைகள் தெரியும்படி சரி செய்தேன். கண்ணாடியில் கீர்த்தனா "சாரி" சொன்னாள். கீர்த்தனாவின் கோபம் பனிபோல... சடுதியில் மறைந்துவிடும்."கார்த்தி, ரம்யா வீடு வடபழனி தானே,,, நீ ரைட் எடுக்காம லெஃப்ட் எடுக்கிற""அம்மு, நாம இப்போ பீச் போறோமாம், பின்ன ஸ்ரீகிருஷ்ணால டின்னர் சாப்பிடுறோமாம்..இது மட்டும்தான் இன்னக்கி அஜெண்டா"கண்ணாடியில் சிரித்தபடியே சொன்ன "தாங்க்ஸ் அண்ட் மீ டூ " என சொல்லிக் கண்ணடித்தாள், மனதில் ரம்யாவிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, வாழ்க்கையின் சில முன்னுரிமைகளைப் புரிந்து கொண்டபடியே கடற்கரையில் வண்டியை நிறுத்தினேன்.

1 comments:

Che Kaliraj 20 November 2008 at 6:20 pm  

ya, you are correct. I feel this situation about my friend life. This is importent never use nonviolence physically & mentally. this is way to happy life. . In every man life, there is no understand their peoples feel. They are feeling to slave some time. pls Try to modify this matter