தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா...

திரு டி. டி. சக்கரவர்த்தி இந்தியாவின் கண்பார்வையற்ற முதலாவது நீதிபதி ஆவார். வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள திமிரி என்ற ஊரைச் சேர்ந்த இவர் தன் நான்கு வயதில் அம்மை நோயால் கண்பார்வையை இழந்தார். வழக்குரைஞர் பட்டம் பெற்ற இவர் துவக்கத்தில் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பயிற்சி பெற்றார்.
பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றார். தமிழக அரசின் மாவட்ட நீதிபதிப் பயிற்சிக்கு தேர்வு பெற்றார்.2008ல் நடந்த தமிழக அரசின் தேர்வாணைய நீதிபதிகள் தேர்வுக்கான தேர்வில் 13-வது இடம் பெற்றார். தமிழ்நாடு மாவட்ட ஜூடிசியல் அகாடமியில் 2 மாதங்கள் பயிற்சி பெற்றார். வால்பாறை நீதிமன்றத்திலும் பயிற்சி நீதிபதியாக இருந்தார். தனது 41 ஆம் வயதில் ஜூன் 2009 இல் கோவை மாவட்ட 3-வது கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் சக்கரவர்த்தி நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

நன்றி: விக்கிபீடியா மற்றும் தி ஹிந்து

தந்தை மகனுக்காற்றும் உதவி

திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இன்று தமிழகத்தின் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் வேண்டுகோளின்படி ஆளுநர் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதுவரை உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின் இனி பொது நிர்வாகம், மாவட்ட வருவாய், தொழில்துறை, சிறுபான்மையினர் மற்றும் சமூக வளர்ச்சி உள்ளிட்ட துறைகளையும் சேர்த்து கவனித்துகொள்வார்.தமிழகத்தின் முதல் துணை முதல்வருக்கு வாழ்த்துக்கள்!!!

மலர்வளையம்


LTTE தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் இலங்கை படையினரால் கொல்லப்பட்டார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். இனியாவது இலங்கையில் அமைதி திரும்பட்டும்.

இதிலும் குழந்தைகளா?

அமீர் கசவ்(எ)அஜ்மல் கசப்! இந்த பேரை இந்திய மக்கள் அவளவு சீக்கிரம் மறக்க வாய்ப்பில்லை. நவ 26 2008, மும்பை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவன். சுமார் 200 உயிர்களை பலிகொண்ட கொலைவெறி தாக்குதல் முடிந்து 5 மாதங்கள் கடந்த நிலையிலும் இன்னும் இவன் மீதான வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டு கொண்டே செல்லப்படுகிறதே அன்றி தீர்ப்பு வழங்கபோவதற்கான அறிகுறியில்லை. இந்நிலையில் இதில் புதிதாக ஒரு குழப்பம், கசப் சிறுவனென்றும் அவனை சிறுவர் நீதிமன்றம் விசாரிக்க வேண்டுமென்றும் கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

நான் தெரியாமத்தான் கேக்குறேன் கள்ள தோணி வழியா நாட்டுகுள்ள ஊடுருவி 3 நாள் ராணுவத்துக்கே தண்ணி காட்டி, 200 உயிர்களை கொன்ற அரக்கன் குழந்தையா? சரி சிறுவன்னு வெச்சிக்கலாமுனாலும் அவனிடம் நடத்தப்பட்ட முதல் கட்ட விசரனைபடி அந்த கம்முனாட்டியின் வயது 21, ராணுவத்தையே திண்டாட வெச்சவன் போலீசுக்கு பயந்து(?) ரெண்டு வயசு கூட சொல்லியுருந்தா கூட 18 வயசா இருக்கலாம். நம்ம நாட்டுல சிறுவர்கள்னா 14 வயசுக்கு கீழ் உள்ளவர்கள்தான். இப்படி இருக்க இவன் சிறுவனானு எலும்ப சோதிக்கணும், நரம்ப சோதிக்கனும்னு நேரத்தை கடத்தாம அந்த பரதேசி எலும்ப எண்ணீயிருக்கவேனாம்.

இதை விட்டுட்டு 5 மாசமா ஒரு தீவிரவாதிக்கு நூத்து கணக்குல போலீசு பாதுகாப்புக்கு, அவனுக்கு வாதாட ஒரு வக்கீல் அவங்கள அது சரியில்லை இது சரியில்லைனு மாத்துறது, பேப்பர் படிக்கலாமா கூடாதான்னு ஒரு கேசு அதுல அவன் புத்தகங்கள் மட்டும் படிக்கலாமுன்னு தீர்ப்பு, அந்த நாதாரி சத்திய சோதனை படிச்சு காந்தியா மாறப்போறானா? இத இப்படியே விட்டா என்ன ஆகும் பாராளுமன்ற தாக்குதல் நடத்துனவங்களுக்கே தண்டனைய நிறுத்தி வெக்கிற நம்ம நாட்டுல கசப் சின்ன குழந்தை, சுட்டா செத்துருவாங்கனு தெரியாம செஞ்சுட்டான், 100 கோடில 200 பேர்தானே கொன்னான்(அவங்களா இவன் சுடும் போது குறுக்க வந்து செத்துட்டாங்க)அதனால இவனை மன்னிச்சு விடுதலை பண்ணி இந்தியா மனிதநேயத்துல புடுங்கிடிச்சுனு சொல்லிக்கலாம்பாங்க.

இதெல்லாம் பார்க்க வேண்டாமுன்னுதான் ஓம்ப்லே மாதிரி உண்மையான தேசபற்றுள்ளவரு இறைவன் கிட்ட போய்ட்டாரு. அவரு உயிரை குடுத்து புடிச்சா இங்க நாம மயி..!! மயிலிரகால அவன தடவி குடுக்குறோம். ரத்த காட்டேரிக்கு அடிபட்டா மயிலிறகால் வருட தேவையில்லை!. தண்டனைகள் கடுமையானால் மட்டுமே தவறுகள் தவிர்க்கப்படும்!! இந்திய இறையாண்மை மேடை பேச்சுகளால் மட்டும் கெடாது இது போன்ற தவறான முண்ணுதாரனங்களாலும் தான்!!!

இலங்கை போரின் தீவிரம் குறைப்பு(போர் நிறுத்தம் அல்ல)[ஈழமும் இந்திய அரசியலும் பகுதி 3]

பகுதி 1, பகுதி 2 , தொடர்புடைய இலங்கை ராணுவ தளத்தின் சுட்டி
இலங்கையில் விடுதலைபுலிகளுக்கு எதிரான போரின் தீவிரத்தை குறைத்து வான் வழி மற்றும் கனரக ஆயுத போரை நிறுத்திவைப்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. எனினும் LTTE வசம் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் தரைப்படை தொடர்ந்து ஈடுபடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த நடவடிக்கையை போர் நிறுத்தமாக தவறாக கருதவேண்டாம் என்றும் கூறியுள்ளது. இதற்குள் இங்கு திடீர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார் தமிழக முதல்வர் திரு.கருணாநிதி. பின்னர் இந்த அறிவிப்பையடுத்து சில மணிநேரங்களில் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.

இந்த செய்தி இன்று தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்ட விதம் அருமையானது. அவற்றில் இருந்து சில..
1) இலங்கையில் போர் முடிவுக்குவந்தது. இலங்கையரசு போரை நிறுத்துவதாக அறிவிப்பு.
2) கலைஞரின் உண்ணாவிரதத்தை தொடர்ந்து இலங்கை அரசு போரை நிறுத்துவதாக அறிவிப்பு.
3) ஐ.நா, மற்றும் உலக நாடுகளின் வலியுறுத்தலுக்கு பணியாத இலங்கை அரசு தமிழக முதல்வர் கலைஞரின் உண்ணாவிரத போராட்டத்தால் போரை நிறுத்த அறிவித்துள்ளது.

இது காக்கா உக்கார பழம் விழுந்த கதை கூட இல்ல, காக்கா எங்கயோ மேல பறக்க கீழ ஆலமரம் வேரோட சாஞ்ச கதை. தமிழ் கூறும் நல்லுலகம் தசாவதாரம்(கமல் திரைப்படம்[இதை இங்க சொல்லாம விட்டா பச்சை நிற வலைபூவுக்கு காவி ஏறிடிச்சுனுவாங்க] புண்ணியத்துல பட்டர்ப்ளை எபக்டு பற்றி தெரிஞ்சுக்கிடிருபீங்க அது மாதிரி இது கழக மீடியா எபக்டு. சாட்டிலைட்டு சானலுல அரைமணிநேரம் நிகழ்ச்சி வழங்குற லேகிய மருத்துவரே வாய்க்கு வந்ததை அள்ளிவிடும்போது, அந்த சானல் குழுமத்தையே(குடும்பத்தை அல்ல)சொந்தமா வெச்சிருந்தா என்ன எல்லாம் சொல்லலாம்? என்ன சொல்லலாம் இந்த மாதிரி பூசணிக்கா தோட்டத்தையே ஒரு சோத்து பருக்கையில மரச்சிடலாம்.

நீ தமிழின துரோகி, உனக்கு தமிழ் ரத்தமே ஓடல, 85 வயது முதியவரின் அறப்போரை கேலிசெய்யும் பாசிச கோமாளி இப்படியெல்லாம் என்ன திட்டி முடிஞ்சதும் இந்த பாசிச கம்முனாட்டிக்கு சில விஷயம் புரியலை அதை யாரவது பின்னூட்டத்துல விளக்குங்க.
1. செப் 2008 இல் இருந்து பலகட்டங்களா பேரணி, மனித சங்கிலி, அறிக்கை, இரங்கல் கவிதை, ராஜினாமா கடித சேகரிப்பு(சேகரிப்பு-னு குறிப்பிட காரணம் இன்று வரை ஒரு வார்டு கவுன்சிலர் கூட ராஜினாமா பண்ணலை) புள்ளிவிவரம், தீக்குளிப்பு, உண்ணாவிரதம்னு வெரைட்டியா ஸ்டண்டு அடிச்சு இன்ன்னிக்கு இலங்கை அரசா பார்த்து இதுக்கு மேல அங்க அழிக்க ஒண்ணுமில்லைனு ஒஞ்சதுக்கு பின்னாடி என்னாலதான் நின்னுச்சுனு டிவில போட்டுகிட்டா இது அயோக்கியத்தனமா இல்லையா?
2. இந்த செயலை ஒரு நாளைக்கு 70 பேர்னு 8 மாசத்துல சுமார் 15,000 மேற்பட்ட உயிர்கள் போகுறதுக்கு முன்னாடியே ஏன் செய்யலை?
3. 95% LTTE வசமிருந்த பகுதிகளை புடிச்சாச்சு மீதி கொஞ்ச நஞ்ச எடத்துக்கு தரைல ராணுவத்தை முன்னேரசொல்லிட்டு அவங்க தலைலேயே குண்ட போடவேன்னாமேனு இலங்கை ராணுவம் மல்லாக்கா படுத்து துப்பினா மாருல படும்னு சொல்ற கதையா போர் நடவடிக்கையின் தீவிரத்தை குறைச்சா இங்க என்னடானா போரே முடிஞ்சிடுச்சு வெற்றி வெற்றின்னு கூவ ஆரம்பிச்சாச்சு. இது முறையான செய்தி சேகரிப்பு மற்றும் ஒளிபரப்பா இல்லை ஓட்டுபொறுக்கும் நாடகமா.?

என்னடா இவன் இலங்கை பிரச்சனைல தலைவரு மட்டும் நாடமாடுற மாதிரியே சொல்லுரான்னேன்னு பாக்குறீங்களா? தங்க தாரகையை பத்திதான் ஊருக்கே தெரியுமே, மாச ஆரம்பத்துல போருனா பொதுமக்கள் சாவங்கனு சொல்லுவாங்க, தேர்தல் நெருங்கினா தனிஈழம் தான் தீர்வுன்னு சொல்லுவாங்க, அப்பறம் அதை தனிஈழம் இல்லை தமிழ் ஈழம்னுதான் சொன்னேன்னு மாத்துவாங்க, ரெண்டு சீட்டு கூடுதலா ஜெயிக்குற மாதிரி தெரிஞ்சா 'நான் குருவாயூர் கோவிலுக்கு குடுத்த யானையை கூட்டிவந்து ராமர் பாலத்துல இன்னும் கொஞ்சம் மன்னகொட்டி அப்படியே எல்லாரும் இலங்கைக்கு போய் தமிழர்களை காப்பாத்தலாமுன்னு' கூட சொல்வாங்க. ஆனா எனக்கு நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து தமிழின காவலர கொண்டாபட்ட கலைஞரும் இலங்கை பிரச்னையை சினிமா நடிகை மாதிரி தேர்தல் பிரச்சார/ஒட்டு வேட்டைக்கு பயன்படுத்துறது ரொம்ப கேவலம்பா. எப்படியோ இனி இலங்கையில் சிறிது காலம் ஓரளவு அமைதி திரும்பும், உயிர் பலி குறையும். அரசியல்வியாதிகள் விரைவாக மாற்று ஒட்டு வேட்டையை தேடிக்கொள்க!!

வேலை நிறுத்தம்! (ஈழமும் இந்திய அரசியலும் பகுதி 2)

பகுதி 1 இன் சுட்டி
வணக்கம்...
ஏப் 23 2009, இலங்கை தமிழர்களுக்காக தமிழகம் முழுவதும் (ஆளும்கட்சியின்)கடையடைப்பு. எதிர்பார்த்த அளவிற்கு இது வெற்றியடைந்திருந்தாலும் இந்த கடையடைப்பினால் இலங்கை போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்ப்பட்ட நன்மை என்ன? ஒரு நாள் முழுவதும் தமிழகம் முடக்கபட்டதன்றி என்ன பலன். இதற்க்கு பதில் இந்த ஒரு நாள் வருவாயிலிருந்து(தமிழகத்தில் மட்டும்) ஒரு பகுதியை பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக வழங்கியிருக்கலாம். அன்றைய தினம் அனைவரும் கருப்பு பட்டை அணிந்தோ, மௌனம் அனுசரித்தோ எதிர்ப்பை தெரிவித்திருக்கலாம். தேர்தல் நேரத்தில் ஆளும்கட்ச்சியின் பலத்தை பறைசாற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பாக இருந்ததை அல்லாது இந்த வேலைநிறுத்தத்தின் பயன் என்ன. ஈழம் இந்திய அரசியலின் காட்சி பொருளாகப்படுவது என்று நிறுத்தப்படும்?

மகளிர் தின வாழ்த்துக்கள்



மகளிரை மகரந்த மலர்களாக மட்டும் பார்க்காமல், அவர்களின் மகோன்னதத்தையும் போற்றுவோம்!

என் வாழ்வில் நான் சந்தித்த அனைத்து பெண்களுக்கும் இந்த உலக மகளிருக்கும் அவர்களையும் மனிதர்களாக பார்ப்பவர்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.

மகளிராக பிறந்தது உங்கள் வரம் இதை உணர்ந்து மகிழுங்கள்!!


ஏலம் ஒரு பார்வை

இதில் நீதிமன்றம் கூறியது போல் காந்தியுடன் தொடர்புடைய அனைத்தும் இந்தியாவின் சொத்து என்று கொள்ளமுடியாது ஏனெனில், காந்தி தான் உபோயோகித்த பல பொருட்களை அன்பளிப்புகளாக கொடுத்திருக்கலாம் அது பல மனிதர்களை தாண்டி இன்று ஒருவரிடம் உள்ளது, அவர் அதை விற்க நினைக்கிறார் அவ்வளவே!

இதில் கவலைப்பட ஒன்றும் இல்லை. நவஜீவன் சொல்லுவது போல் அந்த பொருட்கள் நவஜீவநிலிருந்து திருடப்பட்டவை என்பது அபத்தமானதாகும். இது உண்மை என்றால் அவர்கள் மீதம் இருக்கும் பொருட்களையாவது ஒழுங்காக பாதுகாப்பார்களா?


அக்டோபர் 2 சமாதியில் அஞ்சலி, ப்ளாக்கில் மது; எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதில் விளம்பர ஆதாயம் தேட அடையாள உண்ணாவிரதம் என்ற அளவில் காந்தியின் சிந்தைகளை பின்பற்றும் நாம் அந்த ஏல பொருட்களை வைத்து மட்டும் என்ன செய்ய போகிறோம்?


உடனே நீ இந்தியனா? ஒரு பையன் அவன் அப்பாவின் பொருட்களை நினைவு சின்னமாக பாதுகாக்கவேண்டாமா? இப்படி ஏலம் போறத பார்த்துக்கொண்டிருக்கலாமானு கேனத்தனமா கேள்வி கேக்காதீங்க..எங்க அப்பா பக்கத்து வீட்டுக்காரருக்கு ஒரு மோதிரம் தராரு அதை எங்க அப்பாவின் மறைவுக்கு பின் என் பக்கத்து வீட்டுக்காரரோ இல்லை அவரிடம் இருந்து அதை பெற்ற ஒருவரோ விற்றால் அதை நான் தடுப்பது சரியாகுமா? அவரின் நினைவாக அவர் காட்டிய வழியில் வாழ்வது, அவர் எனக்கென விட்டு சென்ற பொருட்களை அவர் நினைவாக பாதுகாப்தும்தானே சரியாகும். இதை விட்டு எங்க அப்பா உபயோகிச்சது எல்லாம் என்னோடது அத்தை நான்தான் வெச்சுக்குவேன்னு சொல்லமுடியுமா? எங்க அப்ப, மயில் சிம்மாசனம், கோகினூர் வைரம் இந்த மாதிரி பொருட்களை வாங்கிட்டு வரசொல்லுங்களேன்! ஒழுங்கா காந்தி மியுசியம்களில் இருக்கும் பொருட்கள் திருடுபோகாமலும், அவர் சொல்லிய வழிகளை நடைமுறையிலும் பின்பற்றுங்கப்பா!

இதுல விஜய் மல்லையாவை சும்மா சாராய வியாபாரி அவரு எப்படி காந்தி பொருட்களை வாங்கலாம்னு சொல்றதும் சரியில்லை. இவரின் முயற்ச்சியை நல்ல மார்கெடிங் யுத்தி என்ற வகையில் பாராட்டலாம். அவரோட நல்ல என்னத்தை புரிஞ்சுகாதன் நீ அப்படீன்னு சொல்றவங்களுக்கு ஒரு கேள்வி. இப்படி கோடிகளை கொட்டி ஏலம் எடுப்பவர் அதே காசை கொண்டு இந்திய அரசு சார் பெட்ரோல் நிறுவன கடன்களை அடைககலாமா இல்லையா.

இந்த நிலையை என்னிபார்க்கும் போது அனுஜன்யா அவர்களின் இந்த கவிதை தான் நினைவுக்கு வருகிறது...
பிரியமான அப்பாவுடந்தான்

தந்தையர் தினம் செலவழிந்தது

அந்த முதியோர் இல்லத்தில்!

ஒரு தரம்! ரெண்டு தரம்!! மூணு தரம்!!!

இந்த வாரம் காந்தியடிகளின் கண்ணாடி, கடிகாரம், இரண்டு பாத்திரங்கள், ஒரு லெட்டர் ஆகியவை ஏலத்திற்கு வந்தன. இதை அமெரிக்காவை சேர்ந்த ஜேம்ஸ் ஓடிஸ் என்னும் காந்திபக்தர்(?) ஏலத்தில் தருவதாக அறிவித்தார். இதை தொடருந்து 2007 ஆம் ஆண்டு காந்தியடிகளின் கடிதம் ஒன்று ஏலம் விட இருந்ததை தடுத்து இந்திய அரசே அதை வாங்கியது போல இந்த முறையும் செய்துவிடலாம் என நினைத்து கடைசி நேரத்தில் முயற்சி செய்து பார்த்தது. மார்ச் 4 ஆம் தேதி ஆமதாபாத்தை சேர்ந்த நவஜீவன் நிலையம்(இவர்களே தனது சொத்துகளாக கருதப்படும் அசையும், அசையா பொருட்களுக்கு உரிமை உள்ளவர்கள் என்று காந்தியடிகளே குறிப்பிட்டுள்ளார்) தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் இந்த ஏலத்திற்கு தடை விதித்தது.

இந்நிலையில் இந்த பொருட்களின் உடைமையாளர் ஓடிஸ் அவர்களே இவற்றை இந்திய அரசுக்கு தருவதாகவும் அதற்க்கு அரசு தன் கோரிக்கையை ஏற்க வேண்டும் என்றும் கூறினார். அவர் வைத்த கோரிக்கைகள் 'இந்திய அரசு ஏழைகளின் சுகாதாரத்திற்கு செலவு செய்யும் தொகையை 1% இருந்து 5% ஆகா உயர்த்துதல்' அல்லது 'சுமார் 78 உலக நாடுகளில் காந்தியை பற்றிய நடமாடும் கண்காட்சி அரசு செலவில்'. இந்த கோரிக்கைகள் இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாக அரசு ஏற்க மறுத்து, ஏலத்தின் ஆரம்ப தொகையான 20,000 டாலர்களுக்கு அதை வாங்க முன்வந்தது.

ஆனால் ஓடிஸ் இதை மறுக்க, டெல்லி நீதிமன்றத்தின் கீழ் இந்த ஏலம் வராது என கூறி ஏல கம்பனி ஏலத்தை இன்று நடத்தியது. கடைசியில் இதை பொருட்களை வைத்திருந்த ஓடிஸ் தடுத்தும் நடைபெற்றது வேறு கதை. இவ்வளவு சிக்கல்களுக்கு பின் இந்த ஏலத்தில் ஐந்து பொருட்களையும் கிங்க்பிஷர் நிறுவனர் விஜய் மல்லையா 1.80 மில்லியன் டாலர்களுக்கு வாங்கினார். பின் இந்த பொருட்களை இந்திய அரசிடம் ஒப்படைப்பதாகவும் அறிவித்தார்.
இதை பற்றிய கருத்துகள் நாளை......

தேர்தல் திருவிழா தேதிகள்!!

இந்தியாவின் 15 ஆவது லோக் சபா தேர்தல் தேதி அறிவிச்சுட்டாங்கப்பா!!!ஏப்ரல் 16 முதல் மே 13 வரை 5 கட்ட தேர்தல்..மே 16 வாக்கு எண்ணிக்கை..ஆக, சரியாக ஒரு மாதம் இந்தியாவில் தேர்தல் திருவிழா.

தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக மே 13 அன்று தேர்தல் நடைபெறவுள்ளது

இந்த தேர்தலில் மொத்தம் 714000000 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். சுமார் அறுபது லட்சத்திற்கும் அதிகமான பாதுகாப்பு படை வீரர்கள் பணியில் ஈடுபடவுள்ளனர். வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 8,28,804.

இதில், ஜம்மு, உ.பி யில் ஐந்து கட்டமாகவும்; பீகாரில் நான்கு கட்டமாகவும்; மகாராஷ்டிரம், மேற்கு வங்கத்தில் மூன்று கட்டமாகவும்; ஆந்திரா, அசாம், கர்நாடகா, ஜார்கண்ட், ம.பி, ஒரிசா, பஞ்சாப் ஆகியவற்றில் இரண்டு கட்டமாகவும்; மற்ற மாநிலம், யூனியன் பிரதேசங்களில் ஒரு கட்டமாகவும் தேர்தல் நடை பெறவுள்ளது.

தேர்தல் தேதிகள் மற்றும் தேர்தல் நடைபெறும் தொகுதி எண்ணிக்கை:

ஏப்ரல் 16 -124 தொகுதி, ஏப்ரல் 22,23 - 141 தொகுதி, ஏப்ரல் 30 - 107 தொகுதி, மே 7 - 85 தொகுதி, மே 13 - 86 தொகுதி. மணிப்பூரில் மட்டும் ஏப்ரல் 23 பதிலாக ஏப்ரல் 22 தேர்தல் நடைபெறும்(ஏப்ரல் 23 மணிப்பூரில் உள்ளூர் விடுமுறை)

ஆஸ்கார்

வாழ்த்துக்கள் திரு.ஏ.ஆர்.ரகுமான்

வெற்றிகள் தொடரட்டும்!!!

வரமா? சாபமா??

குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
இதில் எனக்கு வள்ளுவர் கருத்துக்கு மாற்று கருத்து உண்டு. அது 'தம் மக்கள்'னு சொன்னதுக்கு பதில் அவர் 'மக்கள்'னு மட்டும் சொல்லியிருந்தாலே நல்லா இருந்திருக்கும். எந்த குழந்தையா இருந்தா என்னங்க மழலை சொல் இனிமை தானே? இதை நான் இங்க சொல்ல காரணம் சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற சோதனை குழாய் ஜனனங்கள் பற்றி வெளிவந்த செய்திகள்.

நவ 28, 2008 ஹரியானா:
பலராம் ரஜோரிதேவி தம்பதியருக்கு டாக்டர் அனுராக் பிஷோனியின் சிகிச்சையில் சோதனை குழாய் மூலம் குழந்தை பிறந்தது.
டிச 2, 2008 சென்னை:
வேதம் செல்வமேரி தம்பத்கியர் டாக்டர் காமராஜின் சிகிச்சையால் சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்றனர்.

இதுல என்ன பெரிய அதிசயம் இந்த மாதிரி குழந்தை பொறக்குறது 1978-இல் இருந்து நடக்குதேனு கேக்கலாம்? இங்க, குழந்தை ஆச்சரியமான விஷயம் இல்லை, அதோட அப்பா அம்மா பற்றிய விஷயங்கள் தான் அதிர்ச்சிகரமானவை. பலராம் ரஜோரிதேவி தம்பதியருக்கு வயது 72-70. வேதம் செல்வமேரிக்கு 60-57.
இங்க நாம யோசிக்க வேண்டியது அந்த குழந்தையின் எதிர்காலத்தை தான். இந்தியர்களின் சராசரி ஆயுள் 60-65 தான்,
அப்படி இருக்க 60,70 வயதுகளில் போராடி, லட்சங்களில் செலவழித்து(2-5 லட்சம்), ப்ரெஷர், சுகர் மாத்திரைகளோடு இதற்கும் கொஞ்சம் மாத்திரைகளை உள்ளே தள்ளி, பல இனல்கள் கடந்து வருவதற்க்குபதில் ஒரு குழந்தையை தத்தெடுக்கலாமே!. இதற்க்கு செலவழிக்கும் பணம் மற்றும் நேரத்தை அந்த குழந்தைக்கு செலவிடலாமே!. நிற்க, சோதனை குழாய் கருத்தரிப்பிற்கான சாத்தியகூறு சராசரியாக 35%, 45 வயதை கண்டந்தவர்களுக்கு 15% ஆகும்.
CARA(1990-il தொடங்கப்பட்ட இந்த அமைப்பு தான் இந்தியாவுல நடக்குற தத்தெடுப்புகளை கண்காணிச்சு முறைப்படுத்துது. இது மத்திய அரசால் அமைக்கப்பட்ட சுயாட்சி(autonomous) அமைப்பு) . CARA அங்கீகரித்த காப்பகங்களே ஒரு வயதிற்கும் கீழ் இருக்கும் குழந்தையயை தத்தெடுக்கும் பெற்றோர் அதிகபட்சம் 45 வயசுதான் இருக்கலாம், 2 வயசு குழந்தையா இருந்தா பெற்றோர் 46 வயசும், 55 வயதை கடந்த தம்பதிகள் தத்தெடுக்க அனுமதி இல்லைனும் விதிமுறைகள் வைத்திருக்கு. இதன்படியோ அல்லது குடும்ப சூழலால் உங்களால் தத்தெடுக்க முடியவில்லையா? ஒரு குழந்தைக்கு ஸ்பான்சராக இருக்கலாமே. பிரான்ஸ் போன்ற நாடுகளில் டெஸ்ட் டியுப் கருத்தரிப்புகளுக்கு அதிகபட்ச வயது 45 ஆகும். அதுபோல் நம் நாட்டிலும் சட்டங்கள் தேவை.
இதை நான் குழந்தை இல்லாதவரகளையோ அல்லது மருத்துவர்களையோ குறை கூறும் எண்ணத்தில் எழுதவில்லை. இந்த இரண்டு பிரசவத்திலும் மருத்துவர்களின் உழைப்பு பாராட்டப்பட வேண்டியது. ஒரு தம்பதிகளுக்கு குழந்தை இல்லை என்றால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் அதிகமே. ஆனால் இதற்கெல்லாம் தீர்வு நவீன மருத்துவத்தின் மூலம் வாழ்வின் கடைசி காலத்தில் பிள்ளை பெறுவதல்ல. இதன் மூலம் நாம் நன்கு அறிந்து அறிவியல் துணையோடு ஒரு குழந்தையை ஆதரவற்றதாக்குகிறோம். நமக்கு பிள்ளை வேண்டும் என்பதற்காக மருத்துவம் தந்த வரத்தை, நாம் அதன் மூலம் பெற்ற பிள்ளைகளுக்கே சாபமாக்க வேண்டாம்.

வெற்றி வெற்றி!!!

திருமங்கலம் இடைதேர்தலில் சுமார் 39000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது. கண்கள் பணித்து இதயம் இனித்ததற்கான பலன் கிடைத்தது. இந்த வெற்றி நாடாளுமன்ற தேர்தலிலும் தொடருமோ இல்லையோ ஆனால் சென்னை சங்கமம் முடிந்ததும் கலைஞருக்கு அடுத்த ரவுண்டு பாராட்டு கூட்டங்கள் உண்டு. அக இது ஒரு ஜன(pana)நாயக வெற்றி .. மொத்தத்தில் ஜனங்களின் வெற்றி (வோட்டுக்கு ஐயாயிரத்துக்கும் மேல கிடைத்ததாம்!!!)

புலி வால்


சத்யம் கம்பியூடர்ஸ் நிறுவன சேர்மன் திரு ராமலிங்க ராஜு, எம்.டி ராம ராஜு பதவி விலகினர். ராமலிங்க ராஜு சத்யம் நிறுவனத்தில் சில நிதி மோசடிகள் நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதில் கணக்கில் வராத வட்டி மட்டும் 360 கோடி!!!